பத்திரிக்கை செய்திகள்

நீதியரசர் கே.என்.பாஷா ஆணையம் விரைவில் பரிந்துரைகளை அளித்திட தீஒமு வேண்டுகோள்!

Author

TNUEF

Date Published

நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் விரைவில் பரிந்துரைகளை அளித்திட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கறிஞர்கள் - செயற்பாட்டாளர்கள் கூட்டம் வேண்டுகோள் :

சாதி ஆணவக் குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தடுப்புச் சிறப்பு சட்டத்தை கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு நியமித்துள்ள நீதியரசர் கே.என்.பாஷா தலைமையிலான ஆணையம் விரைவில் தனது பரிந்துரைகளை அளிக்கவும், அதற்கான அனைத்து நிர்வாக ஏற்பாடு, ஆதார வளங்களை மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கறிஞர்கள் கூட்டத்தின் தீர்மானம் கோரியுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, தலித் விடுதலைக்கான தேசிய மேடை (DSMM) அகில இந்தியத் துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்திடம் முன் வைக்க வேண்டிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள், முன்னணியின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.

தீர்மானம் :

சாதி ஆணவக் குற்றங்களும், கொலைகளும் பெரும் அதிர்வை தமிழ் மண்ணில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் இக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட சிறப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், பல்வேறு தலித், சமூக நீதி, ஜனநாயக,  அமைப்புகளும் போராடி வந்துள்ளன. இப் பின்புலத்தில் சிறப்புச் சட்ட உருவாக்கத்திற்காக தமிழ்நாடு அரசு நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆணையத்தின் காலவரம்பு மூன்று மாதங்கள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

சாதி ஆணவக் குற்றங்களும், கொலைகளும் தொடர்ந்து நடந்தேறி வரும் வேளையில் சிறப்புச் சட்டத்தின் விரைவான நிறைவேற்றம் அவசியமாகி உள்ளது. சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு, முன் தடுப்பு, பாதுகாப்பு, தீர்வுதவி ஆகியன தாமதம் இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டியுள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு  இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்திற்கு உரிய அலுவலகம்,  ஊழியர்கள், ஆதார வளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை விரைவில் தந்து பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம், நீதியரசர் கே.என்.பாஷா ஆணையத்திற்கு 3 மாத கால வரையறை தரப்பட்டு இருந்தாலும், பணிகளை விரைந்து முடித்து, வலுவான சட்டம் நிறைவேற்றிட வேண்டுமென்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.