தீஒமு யின் தொடர் போராட்டத்தால் உரிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!
Author
TNUEF
Date Published

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டத்தால் உரிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!
திருச்சி பீமநகர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பாரூன் - பார்வதி தம்பதியரின் மகன் தாமரைச்செல்வன் (23) நேற்றைய தினம் சாதியவாத கும்பலால் திருச்சி காவல் நிலைய குடியிருப்பில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி தாமரைச்செல்வத்தின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினருடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் புதிய தமிழகம் கட்சி, வீர தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 மணி நேர தொடர் போராட்டத்தால் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் இணைக்கப்பட்டு, சட்டத்தின் படி முதல் தவணையாக தீருவுதவி ரூ.6 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த தாமரைச்செல்வன் தாயார் பார்வதியிடம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் வழங்கினார்.
நீதிக்கான இப்போராட்டத்தில் சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.லெனின், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர்கள் ஆர்.கலைச்செல்வி, எம்.ஜெயசீலன், மாவட்ட தலைவர் கோ.கனல் கண்ணன், செயலாளர் எஸ்.ரேணுகா மற்றும் வீர தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவன தலைவர் எஸ்.எம்.சேட்டு, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் பாலு, சந்தானம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பென்ஷன், நிலம், வீடு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், வழக்கை விரைந்து நடத்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.
என்று மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
