தகவல் பலகை : 1118
Date Published
அறம் பிறழாமல் வரும்...
அடுத்த படைப்பும்...
“இந்தப் படம் எல்லாரையும் போய்ச் சேரனும்” என்றார் தோழர் கே. பாலகிருஷ்ணன். இந்தச் சமூகத்தின் அவலத்தைத் தோழர்களே வியக்கிற அளவுக்குச் சொல்லி இருக்கிறோமே என என் மனதுக்குள் பெரிய நிறைவு. எல்லாம் முடிந்து நன்றி சொல்லிக் கிளம்பும்போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர் சாமுவேல் ராஜ் என் கையில் சில பக்கங்கள் அடங்கிய ஃபைல் ஒன்றைக் கொடுத்தார்.
காரில் ஏறி அந்த ஃபைலை புரட்டினேன். நான்கைந்து பக்கங்கள்தான். ஆனால், அவை தமிழ்நாடு முழுக்க இருக்கும் பட்டியலினப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எப்படியெல்லாம் தீண்டாமை கொடுமை நடக்கிறது என்பதை ஆதாரத்துடன் சொன்ன பொளேர் ஆவணம். தலித் பஞ்சாயத்து தலைவர்களைத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து காக்கவும் மீட்கவும் இவ்வளவு முன்னெடுப்புகளைச் செய்திருக்கும் செங்கொடி தோழர்களா ஒரு திரை முயற்சியாக மட்டுமே நான் செய்திருக்கும் நந்தனைக் கொண்டாடுகிறார்கள் எனத் திகைத்துப் போனேன்.
தமிழ்நாடு முழுக்க பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்கொள்ளும் சாதியக் கொடுவினைகள் குறித்து அரசே ஓர் ஆணையம் அமைத்து விசாரிக்கச் சொல்லி இருந்தால்கூட இவ்வளவு விவரங்களைக் கள ஆய்வு செய்து கண் முன்னால் நிறுத்தி இருக்க முடியாது. அந்தளவுக்குத் திகைக்க வைத்தது அந்த அறிக்கை. பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் அத்தனை பேரையும் முழு உரிமையுடனும் சுதந்திரத்துடனும் இயங்க வைக்க அந்த அறிக்கையைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியாளர்கள் சாட்டையைச் சுழற்றி இருந்தால், பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் விஷயத்தில் தமிழ்நாடு என்றைக்கோ முன்னுதாரணமான மாநிலமாகக் கொடி கட்டி இருக்கும்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பன்னெடுங்காலமாகச் செய்துவரும் முன்னெடுப்போடு ஒப்பிட்டால் ‘நந்தன்’ ஒரு சிறு பொறிதான். பட்டியலினப் பஞ்சாயத்துத் தலைவர்களின் துயரங்களைப் பந்தி வைத்த படைப்பாக ‘நந்தன்’ எத்தனையோ மேடைகளில் மெச்சப்பட்டிருக்கிறது. ஆனால், பட்டியலினப் பஞ்சாயத்துத் தலைவர்களின் துயரங்கள் குறித்து ஆய்வு, போராட்டம், தீர்வு எனக் களமாடிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர்கள் அவர்களின் மாநாட்டில் எங்களைக் கௌரவித்ததுதான் நந்தனுக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரம். ஓர் ஆலமரத்தின் விழுது, அருகம்புல்லின் இலையைத் தட்டிக் கொடுப்பதுபோல் களமாடிய தோழர்களின் பாராட்டு, ஒரு காலடி மட்டுமே எடுத்து வைத்த நந்தனை கௌரவித்திருக்கிறது. இந்தப் பாராட்டுக்குப் பாத்திரமாய் அடுத்த படைப்பையும் அறத்தின் நெறி பிறழாது கொடுப்பேன் என அத்தனைத் தோழர்களுக்கும் உறுதி அளிக்கிறேன்.
இரா. சரவணன்
"நந்தன்" திரை இயக்குநர்
